மின் கட்டண உயர்வுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை

By Irumporai Aug 25, 2022 02:58 AM GMT
Report

 தமிழ்நாடு மின்வாரியம் அளித்த மின் கட்டண உயர்வு கோரிக்கை மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மின் கட்டண உயர்வு

தமிழ்நாடு நூற்பாலைகள் சங்க தலைமை ஆலோசகர் கே.வெங்கடாச்சலம், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் மற்றும் 2 உறுப்பினர்கள் இருக்க வேண்டும்.

தற்போது தலைவர் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் மட்டுமே உள்ளனர். சட்டத்துறை சார்ந்த உறுப்பினர் இல்லை. இந்நிலையில் தமிழகத்தின் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி மின்வாரியம் சார்பில், தமிழ்நாடு மின் வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை ஒழுங்குமுறை ஆணையம் விசாரணைக்கு ஏற்று, பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தி வருகிறது. தலைவர் மற்றும் ஒரு உறுப்பினர் மட்டும் இருக்கும் நிலையில் ஒழுங்குமுறை ஆணையம் கூடியது சட்டவிரோதம் என்றும் .

மின் கட்டண உயர்வுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை | High Court Put Interim Stay On Power Tariff Rise

மின் கட்டண உயர்வுக்கு தடை

தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினர் நியமிக்கும் வரை மின் கட்டண உயர்வு தொடர்பாக முடிவெடுக்கவும், கருத்து கேட்பு கூட்டம் நடத்தவும் தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதி மன்றம் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினர் நியமிக்கும் வரை தமிழ்நாடு மின்வாரியம் அளித்த மின் கட்டண உயர்வு கோரிக்கை மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை விதிக்கப்படுவதாக அறிவித்தது.

மேலும், இந்த தடை உத்தரவு சட்டத்துறை உறுப்பினர் நியமிக்கும் வரை தொடரும். அதே நேரத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தலாம். மனுதார்கள் தங்களின் ஆட்சேபனைகளை ஒழுங்குமுறை ஆணையத்திடம் தெரிவிக்கலாம் என நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.