சிமெண்ட் விலையேற்றத்தில் மோசடி - சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சிமெண்ட் விலையேற்றம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த கிளாஸ்-1 ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் ஆர். செல்வராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கட்டுமான தொழிலுக்கு மிக முக்கியமான பொருளான சிமெண்ட் விலையேற்றம் சமீபகாலமாக உயர்ந்துள்ளது.
இதனால், கட்டுமானத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தொழிலை நம்பி வாழும் லட்சக்கணக்கான கூலித் தொழிலாளர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில், கட்டுமானத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், சிமெண்ட் விலையேற்றம், இத்தொழிலை கடுமையாக பாதித்துள்ளது. சிமெண்ட் உற்பத்தியாளர்கள் கூட்டுச் சேர்ந்து செயற்கையாக தட்டுப்பாட்டை உண்டாக்கி, விலையை உயர்த்தி வருகின்றனர்.
இதில், சிமெண்ட் உற்பத்தியாளர்களின் கூட்டுச்சதி உள்ளது. இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான்.
ஆகவே செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி, சிமெண்ட் விலையை உயர்த்தி வரும் உற்பத்தியாளர்களின் கூட்டுச்செயல் பற்றி விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட வேண்டும். சிமெண்ட் விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்புராயன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, வி. இளங்கோவன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
இதையடுத்து, சிபிஐ தரப்பு வழக்கறிஞர் சீனிவாசனிடம் நோட்டீஸ் பெற்றுக்கொள்ள அறிவுறுத்திய நீதிபதி, சிமெண்ட் விலையேற்றம் குறித்து விசாரணை நடத்தி ஜூன் 3- ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.