வருவாய் துறையிடம் தங்க கவசத்தை ஒப்படைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
தேவர் தங்கக்கவசத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் வசம் ஒப்படைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தேவர் தங்க கவசத்தை சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் (டிஆர்ஓ) எடுத்துச் செல்லலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், கடந்த 2014 ஆம் ஆண்டு முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை வழங்கினார்.
தங்க கவசம் மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள வங்கியில் அதிமுக, பசும்பொன் தேவர் நினைவாலையம் ஆகியோர் பெயரில் லாக்கரில் வைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டு அக்டோபர் மாதம் 30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்த நாளின் போது மூன்று நாட்களுக்கு முன்னதாக வங்கியில் இருந்து எடுத்துச் சென்று பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அணிவித்து மீண்டும் வங்கி லாக்கரில் வைப்பது வழக்கம்.
இதற்காக அதிமுக பொருளாளர் மற்றும் பசும்பொன் தேவாலய நினைவாலய பொறுப்பாளர்களும் வங்கியில் கையெழுத்திட்டு தங்க கவசத்தினை பெற்றுச் செல்வார்கள்.
தற்போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தங்க கவசத்தை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவரை அதிமுக கட்சியில் இருந்து நீக்கியுள்ளது.
இந்த நிலையில் தங்க கவசத்தை பெரும் அதிகாரம் பொருளாளர் ஆன தனக்கு வழங்க வேண்டும் என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படுவதாக வங்கி நிர்வாகம் தரப்பிலும், பசும்பொன் முத்துராமலிங்கர் தேவாலய தரப்பிலும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையின் இன்று வழக்கு நீதிபதி பவானி சுப்புராயன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அதிமுக கட்சியின் விதிமுறைகளின் படி ஒருங்கிணைப்பாளர், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே தேர்வு செய்யபட்டு இருக்கிறார்கள்.
அவ்வாறு இருக்கும் போது தற்காலிக பொருளாளருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை எனவே தங்க கவசத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
அப்படி இல்லை என்றாலும் மாவட்ட ஆட்சியர் வசம் ஒப்படைக்க வேண்டும் என வாதிடப்பட்டது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் 2190 உறுப்பினர்கள் இணைந்து தற்காலிக இடைக்கால பொதுச் செயலாளரை தேர்வு செய்துள்ளனர்.
இந்த தேர்வு செல்லும் என்று உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் கூறியுள்ளது. ஆகவே சட்டத்தின் படி அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் தங்க கவசத்தை ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தங்க கவசத்தை எடுத்துச் செல்லும் அதிகாரத்தை ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியருக்கு வழங்குவதாகவும், அவர் பொறுப்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் வழங்கப்பட்ட தங்க கவசத்தை வங்கியில் இருந்து எடுத்துச் சென்று அணிவித்து மீண்டும் வங்கியில் ஒப்படைக்க வேண்டும் எனவும், இதற்கு ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையினர் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இந்த உத்தரவு இந்த ஆண்டிற்கு மட்டும் பொருந்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.