அமைச்சர்கள் வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதி 'ஆனந்த் வெங்கடேஷ்' மதுரை கிளைக்கு மாற்றம்!
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஆனந்த் வெங்கடேஷ்
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருபவர் ஆனந்த் வெங்கடேஷ். ஊடகங்களில் அடிக்கடி தென்படும் முகமாக இருந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறார்.
அதில் அமைச்சர்களான பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன், ஐ. பெரியசாமி ஆகியோர் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட வழக்குகளைத் தாமாக முன்வந்து மீண்டும் விசாரித்து வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் வழக்குகளையும் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறார்.
இடமாற்றம்
இந்நிலையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அக்டோபர் 3ம் தேதி முதல் அடுத்த 3 மாதங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதியாக செயல்படுவார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இவர் விசாரித்து வந்த வழக்குகளை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் 3 மாதங்களுக்கு ஒருமுறை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்படுவது வழக்கம். அந்த அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.