1 லட்ச ரூபாய் அபராதம்...பஞ்சாயத்தை முடித்து வைத்த உயர்நீதிமன்றம்.!!
நடிகை திரிஷாவிற்கு எதிராக நடிகர் மன்சூர் அலி கான், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மன்சூர் அலி கான் திரிஷா விவகாரம்
சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அந்த பேச்சிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த விவகாரத்தில் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. இதனையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு காவல்துறையினர் நடிகர் மன்சூர் அலிகான் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
மீண்டும் சர்ச்சை
அதனை தொடர்ந்து தான், மன்சூர் அலி கான் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். ஆனால் பிறகு அதனை மன்சூர் அலி கான் மறுக்க, திரிஷா தரப்பில் இருந்து வழக்கு எதுவும் வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சில நாட்கள் இந்த சர்ச்சை ஓய்ந்ததாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மன்சூர் அலி கான் வழக்கு ஒன்றை தொடுத்தார்.
நடிகைகள் த்ரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவிக்கு எதிராக மன்சூர் அலிகான் மான நஷ்டஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மூன்று பேரும் தலா 1 கோடி ரூபாய் வீதம் ரூ.3 கோடி வழங்க உத்தரவிட வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.
தள்ளுபடி
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது நீதிபதி, பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் போது அதற்கு எதிர்க்கருத்துக்கள் வருவது இயல்பே என குறிப்பிட்டு, மன்சூர் அலி கானுக்கு 1 லட்ச ரூபாய் அபராதம் வித்தித்து தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த அபராத தொகையை இன்னும் இரண்டு வார காலத்திற்கு மன்சூர் அலி கான் சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தில் செலுத்தவேண்டும் என்றும் உத்தர விடப்பட்டுள்ளது.