ஜாமின் மனு தள்ளுபடி - கைது செய்யப்படுவாரா ராஜேந்திர பாலாஜி?

bail highcourt rajendrabalaji
By Irumporai Dec 17, 2021 06:12 AM GMT
Report

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் ஆவின் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக ரவீந்திரன், விஜய் நல்லத்தம்பி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

இதில் ரவீந்தரனின் மருமகனுக்கு ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ. 30 லட்சம் பெற்றதாகவும், இதேபோல் மேலும் பலரிடம் ரூ. 3 கோடி மோசடியில் ஈடுபட்டதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அவரது உதவியாளர் உள்ளிட்ட 4 பேரும் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான மோசடி புகாரில் ஆதாரங்கள் உள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் முன்னாள் அமைச்சரின் உதவியாளர் பலராமன் என்பவர் மூலம் தான், ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்துள்ளதாகவும் வாதிடப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட நால்வரின் முன்ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் அடுத்து ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.