நீதிமன்றங்களில் அம்பேத்கர் உருவப்படங்கள் நீக்கம் - திருமாவளவன், ராமதாஸ் கண்டனம்!
நீதிமன்றங்களில் அம்பேத்கர் உருவப்படங்கள் நீக்கியதற்கு திருமாவளவன் மற்றும் ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உயர் நீதிமன்ற சுற்றறிக்கை
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவர் ஆகியோரின் உருவப்படங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் பதிவுத் துறை அனைத்து நீதி மன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கண்டனம்
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் "உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் இது திட்டமிட்டு புரட்சியாளர் அம்பேத்கரின் படங்கள்,சிலைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் இருக்கிறது என்றும் தெரிவித்தார்.மேலும் இதை திரும்ப பெறவேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இல்லையெனில் கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் 'இந்தியாவில் நீதிமன்றங்கள் செயல்படுவதன் முதன்மை நோக்கம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பது தான். அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதற்கான இடங்களில் அதை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கரின் சிலைகளோ, படங்களோ இருப்பது எந்த வகையில் தவறு ஆகும்? எனவே, நீதிமன்ற வளாகங்களில் மகாத்மா காந்தி, திருவள்ளுவர் ஆகியோருடன் அண்ணல் அம்பேத்கரின் சிலைகள், உருவப்படங்களையும் அமைக்க உயர்நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.