குறைந்த வாடகை..குளியலறையில் கேமரா - வசமாக சிக்கிய விடுதி உரிமையாளர்!
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கர்னல் கஞ்ச் பகுதியில் விடுதி ஒன்றை நடத்தி வரும் ஆஷிஷ் கரே என்பவர் கம்ப்யூட்டர் லேப் ஒன்றையும் வைத்து நடத்தி வருகிறார்.
டாக்டர் ஒருவரின் மகனான இவர் அந்த பகுதியில் தனது விடுதியை குறைந்த விலைக்கு வாடகை விட்டுள்ளார். இதில், இளம்பெண்கள் பலர் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், விடுதியில் உள்ள குளியலறைக்கு இளம்பெண் ஒருவர் குளிக்க சென்றபோது ஷவரில் இருந்து தண்ணீர் சரியாக வராததால் ஷவரின் மேல் மூடியை கழற்றி பார்த்துள்ளார்.
அப்போது அதில் கேமிராவும் அதனுடன் ஒயரும் இணைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து விடுதிக்கு சென்று சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு செய்த போலீசார் விடுதியின் உரிமையாளரான ஆஷிஷ் கரேவை கைது செய்தனர்.
மேலும், அவரிடம் இருந்து கேமிரா, 9 ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் கணினி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில், ஆஷிஷ் கரேவிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதன்படி குளியலறை ஷவரில் பதித்த கேமிராக்களின் வழியே இளம்பெண்கள் குளிக்கும் காட்சிகளை தனது லேப்பில் இருந்தபடி கரே பார்த்து, ரசித்து வந்துள்ளது தெரியவந்தது.
மேலும், அந்த வீடியோக்களை தனது ஹார்ட் டிஸ்க்கில் சேமித்து வைத்து சமூக ஊடகத்தில் வெளியிட்டு விடுவேன் என இளம்பெண்களை ஆஷிஷ் கரே மிரட்டி வந்துள்ளார்.
அந்த வீடியோக்களை ஆஷிஷ் விற்றும் இருக்கிறார் என்று கூறப்படும் நிலையில் அது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.