நடிகை சித்ரா தற்கொலை வழக்கு: கைதான ஹேம்நாத்துக்கு நிபந்தனை ஜாமீன்
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த டிச.9ஆம் தேதி சென்னை நசரத் பேட்டையில் இருக்கும் சொகுசு விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவரது கணவர் ஹேம்நாத் தற்கொலைக்கு தூண்டியதாக கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சித்ரா தற்கொலை செய்து கொள்ளவில்லை, இது திட்டமிட்ட கொலை தான் என்று சித்ராவின் தாயார் உட்பட பல பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தனர். இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், நசரத்பேட்டை காவல் நிலையத்தினரால் டிசம்பர் 12 ஆம் ஹேம்நாத் கைதாகி 60 நாட்களை கடந்த நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் ஜாமீன் வழங்கியிருப்பதாக தெரிவித்தார்.
மேலும் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மதுரையில் தங்கியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஹேம்நாத்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.