நடிகை சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டார்: உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

husband serial television
By Jon Feb 02, 2021 11:53 AM GMT
Report

பிரபல நடிகை சித்ரா தூக்குப்போட்டு தான் தற்கொலை செய்து கொண்டார் என சென்னை உயர்நீதிமன்றத்தில் நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது. பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா கடந்தாண்டு டிசம்பர் மாதம் 9ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக வழக்குபதிவு செய்த நசரத்பேட்டை போலீஸ் அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். பதிவு திருமணம் செய்து கொண்டு இரண்டு மாதங்களில் சித்ரா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரின் கணவர் ஹேம்நாத்தை டிசம்பர் 14ம் தேதி போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேம்நாத் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அவர் தன் மனுவில், 'தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கக் கூடாது என சித்ராவை வற்புறுத்தியதாகவும், அவர் நடத்தையில் சந்தேகம் கொண்டதாகவும் தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையில்லை.

தனக்கும், சித்ராவுக்கும் இடையில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. எந்தக் குற்றமும் செய்யாத தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டபின் 13 சாட்சிகள் மீண்டும் விசாரிக்கப்பட்டுள்ளனர் என்றும், சித்ரா, தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கின் விசாரணையை பிப்ரவரி 5-ம் தேதிக்குத் தள்ளிவைத்த நீதிபதி, வழக்கின் விசாரணை குறித்த அறிக்கையை பிப்ரவரி 4-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.