இனி மெட்ரோ ரயிலில் டோக்கன் இல்லை - பயணிகள் மகிழ்ச்சி
சென்னை மெட்ரோ ரயிலில் டோக்கனுக்குப் பதிலாக இனி கியூ.ஆர் கோடுடன் கூடிய காகிதப்பயணச்சீட்டு பயன்படுத்தும் முறை அடுத்த சில மாதங்களில் அறிமுகமாகும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் பல்வேறு இடங்களில் மக்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் போக்குவரத்து நெரிசல் கொண்ட சென்னை மாநகரிலும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது.
இந்த நிலையில் தற்போது கொரோனா கட்டுப்பாடு காரணமாக டோக்கன்களை ஒவ்வொரு முறையும் கிருமிநாசினிக் கொண்டு சுத்தப்படுத்த வேண்டியுள்ளது.
இதனால் மிகுந்த சிரமத்தை சந்திக்க வேண்டி இருப்பதால் மெட்ரோ ரயிலில் தொடுதல் இல்லாத பயணத்துக்கான வழிமுறையை மெட்ரோ நிர்வாகம் அறிமுகம் செய்யவுள்ளது.
இதற்காக அச்சிடப்பட்ட கியூ ஆர் கோடுடன் கூடிய பயணச்சீட்டுகள் பயன்படுத்தும் முறையை நடைமுறைப்படுத்தவுள்ளது.
இதன் மூலம் இனி வரும் காலங்களில் மெட்ரோவில் பயணம் செய்யும் ரயில் பயணிகள் விமானநிலையங்களில் போர்டிங் பாஸைப்போன்று காகித பயணச்சீட்டை ஒரு பொத்தானை அழுத்தினால் வாங்க முடியும். இதன் மூலம் இனி எந்த கொரோனா அச்சமின்றி பயணிகள் எளிதாகப் பயணிக்க முடியும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.