கும்பமேளாவில் 30 பேர் உயிரிழப்பு; அதெல்லாம் பெரிய விஷயமில்லை - நடிகை சர்ச்சை பேச்சு
கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஒரு பெரிய விஷயமில்லை என ஹேமமாலினி கூறியுள்ளார்.
கும்பமேளா
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கி கும்பமேளா விழா நடைபெற்று வருகிறது.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நடைபெறும் நிகழ்வு என்பதால், உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
நெரிசலில் உயிரிழப்பு
நாளை இந்த நிகழ்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு காலை 11 மணி முதல் 11.30 மணிக்குள் நீராட உள்ளார். முன்னதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா நீராடினார்.
இந்நிலையில் கடந்த ஜனவரி 29ஆம் தேதி தை அமாவாசையை முன்னிட்டு, பக்தர்கள் எண்ணிக்கை அதிகமானது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியது.
இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ள உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
ஹேம மாலினி
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகையும் பாஜக எம்.பியுமான ஹேம மாலினி(hema malini), “நாங்களும் கும்பமேளாவுக்குச் சென்றிருந்தோம். அங்கு நன்றாக நீராடினோம். மாநில அரசால் அனைத்தும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஒரு பெரிய சம்பவம் அல்ல. அது மிகைப்படுத்தப்படுகிறது.
அதிகப்படியான மக்கள் வந்திருந்ததால் அதை நிர்வகிப்பது மிகவும் கடினம். மாநில அரசு, தங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது என கூறினார்.
இறந்தவர்களின் எண்ணிக்கையை மாநில அரசு மறைத்து வருவதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டியது குறித்த கேள்விக்கு, அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள். தவறான விஷயங்களைச் சொல்வது அவர்களின் வேலை" என பதிலளித்தார்.