ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் தப்பிய குரூப் கேப்டன் - வீர தீரத்திற்கான விருது பெற்றவர்

armyhelicoptercrash varunsingh
By Petchi Avudaiappan Dec 08, 2021 05:44 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவத்தில், இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் உயிர் பிழைத்துள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. 

குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் அதில் பயணித்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.  நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில்  குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் உயிர் பிழைத்துள்ளார்.

துடிப்பும், திறமையும் கொண்ட அருண் சிங் தனது வீர தீரத்திற்காக சுதந்திர தினத்தன்று சவுர்யா சக்ரா பதக்கத்தை பெற்றுள்ளார். தன்னலமற்ற சேவை, துணிச்சலாக செயல்பட்டு பேரிழப்பை தவிர்த்தது ஆகிய காரணங்களுக்காக, இந்த பதக்கம் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் வழங்கப்படுவது வழக்கம். 

கடந்த ஆண்டு அக்டோபர் 12 ஆம்தேதி இலகு ரக போர் விமானத்தில் (LCA)சென்று கொண்டிருந்தபோது,நடுவானில் விமானம் கட்டுப்பாட்டை இழந்தது. அந்த நெருக்கடியான தருணத்தில் கவனமாக செயல்பட்ட வருண் சிங், விமானத்தை சரி செய்து தரையிறக்க முற்பட்டார்.

விமானம் தரையை நோக்கி வந்து கொண்டிருந்தபோது, மீண்டும் பாதிப்பு ஏற்பட்டது. இதுபோன்ற ஒரு பாதிப்பு இந்திய விமானப்படை வரலாற்றிலேயே ஏற்பட்டது இல்லை என்று பாதுகாப்புத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

இரண்டாவது பாதிப்பையும் சரி செய்த வருண், விமானத்தை பத்திரமாக இறக்க முற்பட்டார். மீண்டும் 10 ஆயிரம் அடி உயரத்தில், மற்றொரு கோளாறு ஏற்பட கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்கள் பதறிப் போனார்கள். அந்த நேரத்தில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழல் வருணுக்கு ஏற்பட்டது. இருப்பினும், சாதுரியமாக செயல்பட்ட வருண், போர் விமானத்தை எந்த சேதமும் இல்லாமல் தரையிறக்கினார்.

வருணின் திறமையை பார்த்த விமானப்படை உயர் அதிகாரிகள் மிரண்டு போனார்கள். அவரை வீர தீரத்திற்கான சவுர்யா விருதுக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். விருது வருணுக்கு கடந்த சுதந்திர தினத்தன்று குடியரசு தலைவரால் வழங்கப்பட்டது. அத்தகைய வீரர்தான் இன்றைக்கு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

அவர் வெற்றிகரமாக இந்த விபத்திலிருந்து இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என பொதுமக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.