பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்து : விசாரணை அறிக்கையில் வெளியான புதிய தகவல்
14 பேர் இறப்புக்கு காரணமான குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்த விசாரணை அறிக்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் அமைந்துள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் நடைபெறவிருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கடந்த டிசம்பர் 8 ஆம் தேதியன்று கோவை மாவட்டம் சூலூரிலிருந்து குன்னூருக்கு Mi-17V5 ரக ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வந்த போது ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்பாக காட்டேரி பகுதியில் உள்ள வனப்பகுதியில் திடீரென விழுந்து நொறுங்கியது.
இந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரிக்க விமானப் படை அதிகாரி மானவேந்திர சிங் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இதனையடுத்து குன்னூர் விபத்து குறித்தான முழு விசாரணை அறிக்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் இந்த விபத்துக்கு தொழில்நுட்ப அல்லது இயந்திர கோளாறு தான் எனவும், ஹெலிகாப்டர் நல்ல நிலையில் இருந்ததாகவும் CFIT எனப்படும் தொழில்நுட்ப குறியீடே விபத்துக்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி தருணத்தில் முடிவெடுப்பதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மோசமான வானிலையால் முடிவெடுப்பதில் பைலட் அல்லது அவரது குழுவினருக்கு தடுமாற்றம் ஏற்பட்டு இருக்கலாம் என்றும் அத்துறை வல்லுனர்கள் CFIT என்பதற்கு விளக்கம் அளித்துள்ளனர்.
ஹெலிகாப்டரை ஓட்டி வந்த விங் கமாண்டர் பிரித்வி சிங் சவுகான், விபத்து நடைபெற 8 நிமிடங்கள் இருந்த போது ஹெலிகாப்டரை தரையிறக்கப் போவதாக பேசியிருந்ததாக கூறப்படுகிறது. அன்றைய தினம் வானிலை மிக மோசமானதாக இருந்துள்ளது. அடர்பனி காரணமாக பார்வை தெளிவாக இல்லாததால் தரையிலிருந்து 500-600 மீட்டர்கள் உயரத்தில் மட்டுமே ஹெலிகாப்டரை இயக்கியிருக்கிறார். மேலும் அவர் மலை ரயில் பாதையை தொடர்ந்து வெலிங்டனுக்கு பயணமாகியதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.