“ஹெலிகாப்டர் விபத்தில் சீனா பின்னனி இருக்கலாம்” - சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்

allegations helicopter crash coonoor subramaniyan swamy china conspiracy
By Thahir Dec 09, 2021 12:13 PM GMT
Report

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் மரணத்தில் சந்தேகம் எழுப்பி இருக்கிறார் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.

இந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தின் பின்னணியில் சீனாவின் சதி இருக்கலாம் என்று அவர் சந்தேகிக்கிறார்.

இதனால், இந்த சம்பவம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உட்பட 14 பேர் ஹெலிகாப்டரில் சென்றார்கள்.

கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து நேற்று காலை 10.30 மணிக்கு புறப்பட்டு சென்றார்கள்.

சூலூர் விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் வெலிங்டனில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் குன்னூர் காட்டேரிப் பகுதியில் பறந்த போது திடீர் என்று கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்தது .

இந்த கோர விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். கேப்டன் வருண் சிங் 80 சதவிகித தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நாட்டையே உலுக்கி எடுத்திருக்கும் இந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி, வீடியோபேட்டி ஒன்றில், "சீனா, இந்தியாவிற்கு தொல்லை அளித்து வருகிறது.

சீனாவால் நமக்கு ஒரு ஆபத்து, சீனா நமது எல்லைக்குள் வந்து விட்டது என்று கூறியவர் பிபின் ராவத் .இந்த விபத்தில் சீனா பின்னணி இருக்கலாம்.

இது ஒரு சைபர் வார்ஃபேர் ஆக இருக்கலாம். லேசர் மூலமாக தொழில்நுட்ப மாறுபாடுகளை ஏற்படுத்த முடியும். இதுவும் அதுபோன்ற ஒன்றாக இருக்கக் கூடுமோ என்ற சந்தேகம் உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.

சீனா ஏற்படுத்தும் ஆபத்துகளை நாம் சாதாரணமாக எடுத்துக் கொண்டு விட்டோம். நாம் இந்த விஷயத்தில் மிகக் கடுமையாக மறு ஆய்வு செய்ய தேவையிருக்கிறது என்கிறார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு விஷயங்களில் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

தவிர, தனது டுவிட்டர் பக்கத்திலும் , முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது.

இதனால் மத்திய அரசு இது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணையைத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி.