"திமுகவினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது" - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
''தி.மு.க.,வினர் தோல்வி பயத்தில், ஓட்டு எண்ணிக்கை மையங்கள் குறித்து, புகார் கூறி வருகின்றனர்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள, நான்கு தொகுதிகளின் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், தளவாப்பாளையத்தில் உள்ள, தனியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. நேற்று காலை ஓட்டு எண்ணும் மையத்தில் உள்ள, கண்காணிப்பு அறையை, , கரூர் தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளரான விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.
அதன்பின் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது,
கரூரில் உள்ள ஓட்டு எண்ணிக்கை மையம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தவறுகள் நடக்க வாய்ப்பில்லை. இந்த மையம், தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. நாள்தோறும் ஏராளமான கன்டெய்னர் லாரிகள் சென்ற வண்ணம் உள்ளன.
அதையும், தி.மு.க., வினர் குறை சொல்லுவார்கள். தி.மு.க.,வினருக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஓட்டு எண்ணிக்கை மையங்கள் குறித்து, தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். கடந்த, 2016 ல் நடந்த சட்டசபை தேர்தலின் போது, அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வராது என, கருத்து கணிப்புகள் வெளியாகின.
ஆனால், தேர்தல் முடிவுகள், அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக வந்தது.
தமிழக மக்கள், மறைந்த முதல்வர் ஜெயலலிதா பக்கம் நின்றனர். அதேபோல், வரும் மே, 2ல் நடக்கவுள்ள ஓட்டு எண்ணிக்கையின் போது, அ.தி.மு.க., 140 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று, தனி மெஜாரிட்டியுடன், ஆட்சி அமைக்கும். கருத்து கணிப்புகள் குறித்து, நாங்கள் கவலைப்படவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.