வரிசை வரிசையாக வாரிசுகள் படைக்களம், உண்மையான திமுக தொண்டர்களுக்கு வாய்ப்பு மறுப்பு

dmk stalin volunteers
By Jon Mar 13, 2021 11:38 AM GMT
Report

திமுக வேட்பாளர்கள் பட்டியலில் 21 வாரிசுகள் இடம் பெற்றிருப்பது தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற பிரச்சாரம் எடுபட்டுள்ள நிலையில் தி.மு.கவில் வாரிசுகளுக்கு இடம் அளித்திருப்பது தி.மு.கவிற்கு எதிராக அமையும் என்று விமர்சனம் எழுந்துள்ளது.

தி.மு.க சார்பில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவுள்ள 173 வேட்பாளர்களின் பட்டியலை தி.மு.க தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். இதில் புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்களிடையே நிலவி வந்தது. இதற்கு முற்றிலும் மாறாக ஏற்கனவே போட்டியிட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

பட்டியலில் 21 பேர் ஏற்கனவே தி.மு.கவில் பல்வேறு பொறுப்புகளில் உள்ளவர்களுக்கும் சட்ட மன்ற தேர்தலில் ஏற்கனவே போட்டியிட்டவர்களுக்கும் அவர்களின் வாரிசுகளுக்கும் இடங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் நேரிடை வாரிசுகள் 16 பேருக்கும் 5 பேர் தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் இடங்கள் வழங்கப்பட்டுள்ளது.

குறுநில மன்னர்கள் போன்று வாழையடி வாழையாக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருவது தி.மு.கவின் அடிமட்ட தொண்டர்களை கடுப்படைய செய்துள்ளது. கருணாநிதி காலத்தில் இருந்து தி.மு.கவின் மாவட்ட செயலாளர்கள் அந்த பகுதியின் குறுநில மன்னர்களாக செயல்பட்டு வந்தனர். அது ஸ்டாலின் காலத்திலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை முறியடிக்க முடியாதது ஸ்டாலினின் பலவீனத்தையே காட்டுகிறது.

இந்த பலவீனம் சட்ட பேரவை தேர்தலிலும் எதிரொலிப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். தி.மு.க குடும்ப கட்சி என்று ஏற்கனவே அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில் 21 வாரிசுகளுக்கு தேர்தலில் போட்டியிட இடம் கொடுத்துள்ளது, எதிர்கட்சிகளின் விமர்சனத்தை உண்மையாக்கியுள்ளது.

வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற பிரச்சாரம் நாடு முழுவதும் நல்ல பலனை அளித்துள்ள நிலையில் தமிழகத்தில் வாரிசு அரசியல் குறித்து சர்ச்சையை அரசியல் கட்சிகள் கிளப்ப தி.மு.க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். உதயநிதிக்கு வாய்ப்பு அளித்துள்ளதன் மூலம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கட்சியை கருணாநிதி குடும்பத்தின் அடுத்த தலைமுறைக்கு கைமாற்றி விடுவதாக தி.மு.க தொண்டர்கள் விமர்சனம் செய்கின்றனர்.

உதயநிதிக்கு வாய்ப்பு கொடுப்பதால் தி.மு.கவின் மற்ற தலைவர்களின் வாரிசுகளுக்கு இடம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தி.மு.கவின் அடிமட்ட தொண்டர்கள் கவலையுடன் கூறுகின்றனர். இது சித்தாந்தங்களில் உருவாக்கப்பட்ட இயக்கத்தின் கொள்கைகளுக்கு நேர் எதிராக இருப்பதாக அரசியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.