கல்லில் ஒளிந்திருந்த ரகசியம்; 60 ஆண்டுகள் துணி துவைத்த குடும்பம் - மீட்ட அதிகாரிகள்!
பழமையான கல்வெட்டு என தெரியாமல் 60 ஆண்டுகளாக துணி துவைக்கப்பட்டு வந்த சம்பவம் நடந்தேறியுள்ளது.
கல்வெட்டு
ராமநாதபுரம் மாவட்டம் வண்ணாங்குண்டு அருகிலுள்ள மரைக்காயர் நகர் பகுதியில் பழமையான கல்வெட்டு ஒன்று இருப்பதாக தொல்லியல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் வந்து பார்த்தபோது பாலு என்பவரின் வீட்டின் அருகிலுள்ள கிணற்றடியில் அந்த கல் கிடந்துள்ளது.
அந்த கல்லை துணி துவைப்பதற்காக அவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். மேலும், அதில் ஹீப்ரு மொழியில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனையடுத்து அந்த கல் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
வணிக மையம்
இதுகுறித்து பாலு கூறுகையில், "கிணறு தோண்டும்போது அந்த கல் கிடைத்தது. படிக்கத் தெரியாததால் அதை துணி துவைக்க பயன்படுத்தினோம். தொல்லியல் துறையினர் அதனை கேட்டதால் ஒப்படைத்தோம்" என்றார்.
மேலும், இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பல வெளிநாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் கீழக்கரை, பெரியபட்டிணம், அழகன்குளம் பகுதிகளை வணிக மையமாக பயன்படுத்தி வந்ததாகவும், அதுதொடர்பாக கிடைத்த கல்வெட்டுகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.