கன்னியாகுமரில் கொட்டித் தீர்க்கும் கனமழை - அணைகள் நிரம்பியதால் வெள்ள அபாய எச்சரிக்கை
கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கன மழை பெய்ததால் பேச்சிபாறை அணையில் 11 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு, சிற்றாறு 794 கன அடி உபரி நீர் திறப்பு தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கன மழை பெய்து வருகிறது. 48 அடி மொத்த கொள்ளளவு கொண்ட பேச்சிபாறை அணை அபாய அளவை தாண்டி வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
இதனால் வினாடிக்கு 11 ஆயிரம் கன அடி தண்ணீர் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இது போன்று 18 அடி மொத்த கொள்ளளவு கொண்ட சிற்றார் அணையில் இருந்து 794 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது சிதறால், திக்குறிச்சி, குழித்துறை , காப்பிகாடு, வைக்கலூர், பரக்காணி, போன்ற தாமிரபரணி கரையோரம், முல்லையாறு கரையோரம் உள்ள வாழை, மரிச்சினி,நெல் உட்பட விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்த பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பேருராட்சி, பொதுப்பணி, காவல்துறை சார்பில் வாகனங்களில் சென்று ஒலி பெருக்கிகள் மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
மாநில பேரிடர் மீட்டு குழ திருவட்டார் உட்பட பல பகுதிகளில் முகாமிட்டுள்ளனர், தீயணைப்பு துறை உசார் நிலையில் உள்ளது. மாவட்டம் முழுவதும் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது நேற்று முதல் இன்று வரை மாவட்டம் முழுக்க பல பகுதிகளில் மின்தடை காணபடுகிறது பல பகுதிகள் மரங்கள் சாய்ந்தன.