வெள்ளத்தில் சிக்கி 20 பேர் பலி - வெனிசுலா நாட்டில் சோகம்
வெனிசுலா நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 20 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் மரிடா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மாகாணத்தில் பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதால் 1,200க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததோடு, பல்வேறு இடங்களில் சாலை, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலர் படுகாயமடைந்துள்ள நிலையில், 17 பேர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டும், நிலச்சரிவில் சிக்கியும் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து அங்கு கனமழை பெய்து வருவதால் காணாமல் போனவர்களை மீட்கும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.