தொடர்மழை காரணமாக நெல்லை, குமரி உள்பட 7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
தூத்துக்குடி, நெல்லை, தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதேபோன்று. கனமழை எதிரொலியாக புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொடர்மழையால், தமிழகத்தில் 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. நெல்லையில் நேற்று இரவு விடிய விடிய பலத்த மழை பெய்தது.
இதனையொட்டி இன்று நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்தநிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த தகவலை கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார். கனமழை எச்சரிக்கையால் கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த தகவலை கலெக்டர் தெரிவித்துள்ளார். இதேபோல புதுச்சேரியில் கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
கனமழை எச்சரிக்கை காரணமாக காரைக்காலில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு கலெக்டர் காயத்ரி இன்றும் விடுமுறை அறிவித்து உள்ளார்.
தொடர்மழை எதிரொலியாக தூத்துக்குடியில் இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை கலெக்டர் செந்தில் ராஜ் அறிவித்து உள்ளார்.
கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரத்திலும் தொடர்மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியானது.
இதனால், தமிழகத்தில் தொடர்மழை எதிரொலியாக நெல்லை, குமரி உள்பட 7 மாவட்டங்களை சேர்ந்த பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.