கனமழை எச்சரிக்கை: தயார் நிலையில் இருக்க மாவட்டங்களுக்கு அலெர்ட்!
தமிழகத்திற்கு அடுத்த 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை
தமிழகத்தில் நவம்பர் 21 மற்றும் நவ.22 ஆம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழையும், நவ.23 ஆம் தேதி மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது., "தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதன் அருகில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. 21 ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
காற்றழுத்த தாழ்வு
விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராணிப்பேட், திருவள்ளூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். 22 ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராணிப்பேட், திருவள்ளூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். 23 ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்த வரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.