தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - பொதுமக்கள் மகிழ்ச்சி
தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை தெற்கு அந்தமான் கடல், நிக்கோபார் தீவுகள், தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று தொடங்கியதாக இந்திய வானிலை மையம் தெரிவித்தது. இதனால் கேரளா, தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் தீவிர கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
ஒருவாரம் முன்கூட்டியே பருவமழை தொடங்கியுள்ளதால் தமிழ்நாடு, கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களும் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. அதேசமயம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்தக்காற்று வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.