தமிழகத்தில் நாளை முதல் கனமழை - எந்தெந்த மாவட்டங்கள் என்ன தெரியுமா?

tamilnadu heavyrain
By Petchi Avudaiappan Dec 03, 2021 12:51 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

தென் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவ உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட அதிகமாக மழை பெய்துள்ளது. 

அதன்படி வெப்பசலனம் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று இரவுக்குள் புயலாக வலுப்பெற்று, மத்திய வங்கக்கடல் பகுதிக்கு நகரக்கூடும். அது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா அருகே நாளை  காலை கரையை நெருங்கும் என்று ஆய்வு மையம் கணித்துள்ளது.

புயல் உருவானால் அதற்கு ‘ஜாவித்' என்று பெயரிடப்படும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே குறிப்பிட்டு இருக்கிறது. இதன் காரணமாக, நாளை மதுரை, விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. 

அதேசமயம் மத்திய வங்கக்கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி, ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 50 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது.