கொட்டித் தீர்க்கும் கனமழை - கேரள மக்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

kerala redalert heavyrain
By Petchi Avudaiappan Oct 16, 2021 06:43 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

கேரளாவில் மிக கனமழை காரணமாக இடுக்கி, திருச்சூர் உட்பட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதால் கேரளாவில் கடலோர மாவட்டங்கள் உட்பட மலை மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

மழையின் காரணமாக மாநிலத்தில் உள்ள முக்கிய அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து உள்ளது. அதேசமயம் கோழிக்கோடு, பாலக்காடு, மலப்புரம், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனிடையே வருகின்ற 19 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு கோட்டயம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் உட்பட 7 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோரம் மற்றும் மலைப்பகுதி மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார். மேலும் கோட்டயத்தில் பூஞ்சார் பகுதியில் கேரள அரசுப் பேருந்து ஒன்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது. இதையடுத்து, ஓட்டுநரின் இருக்கை வழியாக பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதற்கிடையில் இடுக்கி அணைக்கு வரும் வெள்ளத்தின் அளவு அபாய கட்டத்தை எட்டியுள்ளதால் அங்கு நீல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.