சென்னையில் மழை தீவிரம்: அமைச்சர்களுக்கு முதலமைச்சர் அவசர உத்தரவு!
சென்னையில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, மழை முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளைத் தீவிரப்படுத்தும் வகையில், பொறுப்பு அமைச்சர்கள் உடனடியாகச் சென்னைக்குத் திரும்ப வேண்டும் என முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் நேற்று மாலை முதல் இரவு முழுவதும் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பாரிமுனையில் 36 செ.மீ., கத்திவாக்கத்தில் 33 செ.மீ. மழை பதிவானது.

பொறுப்பு அமைச்சர்களுக்கு உத்தரவு
மேலும், ராயபுரம், தண்டையார்பேட்டை, எழும்பூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழைநீர் தேங்கி, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
வட தமிழகப் பகுதிகளில் நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாக, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அடுத்த இரண்டு நாட்களுக்கும் மழை தொடர வாய்ப்புள்ளதால், சென்னையின் 15 மண்டலங்களிலும் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அமைச்சர்கள் உடனடியாகத் திரும்பி, மழை முன்னெச்சரிக்கைப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.