சென்னையில் விடிய விடிய விடாமல் கொட்டும் கனமழை - தரையிறங்க முடியாமல் திருப்பி விடப்பட்ட விமானங்கள்
சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை விடாமல் பெய்து வருவதால் சென்னை விமான நிலையில் விமானங்கள் தரையிறங்க முடியாமல் பெங்களூரக்கு திருப்பி விடப்பட்டது.
சென்னையில் வெளுத்து வாங்கும் மழை
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
இன்று தென் சென்னை பகுதிகளில் மட்டும் 150 மிமீக்கும் அதிகமான மழை பெய்துள்ளது. நேற்று காலை 8.30 மணியில் இருந்து இன்று காலை 5.30 மணி வரை சென்னையில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது.
அதன்படி, சென்னை மீனம்பாக்கத்தில் 137.6 மிமீ மழை பொழிந்துள்ளது. தரமணியில் 117.0 மிமீ மழையும் செம்பரம்பாக்கத்தில் 109.5 மிமீ மழையும் ஜமீர் கொரட்டூரில் 84 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.
அதேபோல் பூந்தமல்லியில் 74 மிமீ மழையும் நந்தனத்தில் 117.0 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. மேற்கு தாம்பரம் 82.0 மிமீ, நுங்கம்பாக்கம் 67.4 மிமீ என மழை பதிவாகியுள்ளது.
சென்னையை அடுத்த திருவள்ளூரில் 50 மிமீ மழையும் காஞ்சிபுரத்தில் 79 மிமீ மழையும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்பிவிடப்பட்ட விமானங்கள்
கனமழை காரணமாக சென்னை வரும் 10 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. துபாய், அபுதாபி, லண்டன், சார்ஜா போன்ற நகரங்களில் இருந்து வந்த விமானங்கள் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன.
அதேவேளையில் சென்னையில் இருந்து 17 பன்னாட்டு விமானங்களும் தாமதமாக புறப்பட்டன. மேலும் புறப்பட வேண்டி காத்திருக்கும் விமானங்களும் தாமதமாக செல்லலாம் எனவும் கூறப்படுகிறது.