ஒரு மணி நேரத்திற்கு மேலாக விடாமல் பெய்த கனமழை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் சுமார் ஒருமணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.
பரவலாக கனமழை
தமிழகத்தில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் குறிப்பாக தென்காசி நெல்லை,விருதுநகர் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே ஸ்ரீவில்லிப்புத்தூரில் கடந்த ஒரு வார காலமாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது.
ஒரு மணி நேரம் விடாது மழை
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மல்லி, அழகாபுரி, வண்ணியம்பட்டி, வத்திராயிருப்பு , கூமாபட்டி, கான்சாபுரம், தம்பிபட்டி, மகாராஜபுரம், கோபாலபுரம், பிளவக்கல் அணை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.
கனமழையின் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டு சென்றனர்.மழையின் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.