50 ஆண்டுகளில் இல்லாத கனமழை - வெள்ளத்தில் மிதக்கும் சஹாரா பாலைவனம்
கனமழையால் சஹாரா பாலைவனத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
சஹாரா பாலைவனம்
ஆப்பிரிக்காவின் வடபகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய பாலைவனம் சஹாரா பாலைவனம் ஆகும். இந்த பாலைவனம் எகிப்து, சூடான் என 12 நாடுகள் வரை விரிந்து உள்ளது.
இந்த பாலைவனத்தில் குறைந்தபட்ச வெப்ப நிலையாக 80 டிகிரி ஃபாரன்ஹீட்டும், அதிகபட்சமாக 122 டிகிரி ஃபாரன்ஹீட்டும் இருக்கிறது. உலகின் வறண்ட பகுதிகளில் ஒன்றான சஹாரா பாலைவனத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ள சம்பவம் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வெள்ளம்
மொராக்கோ தலைநகர் ரபாட்டாவில் இருந்து 450 கி.மீ. தொலைவில் உள்ள டாகோயுனைட் கிராமத்தில் 24 மணி நேரத்தில் 100 மி.மீ. மழை பெய்ததால் இந்த வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளில் குறைந்த நேரத்தில் இந்த அளவுக்கு அதிக மழை பெய்ததில்லை என மொராக்கோ வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஓராண்டில் பெய்யக்கூடிய மழை ஒரே நாளில் பெய்ததால் அங்குள்ள வறண்ட ஏரியான இரிக்கி ஏரியில் நீர் நிரம்பி வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் உலகின் மிகவும் வறண்ட பாலைவனத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் புவி வெப்பமயமாதல், கால நிலை மாற்றம் குறித்து சூழலியல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.