தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது. இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அந்தமான் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இன்று காலையில் மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. சில நேரங்களில் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசியதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலுப்பெற்று நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிற 8-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல்,ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி,சேலம்,கரூர்,நாமக்கல்,தென்காசி,திருநெல்வேலி,கன்னியாக்குமரி ஆகிய 14 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து,தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் எனவும் இதனால் இன்றும், நாளையும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.