அதிகரிக்க போகும் வெப்பம்...அடுத்த 3 நாட்களுக்கு வெளியே போகதீங்க..!
வெயிலின் தாக்கம் அடுத்த 3 நாட்களுக்கு அதிகரிக்கும் எனவே மக்கள் பகல் பயணத்தை தவிர்க்க வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வாட்டி வதைக்கும் வெயில்
தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்பதால் பகல் நேர பயணத்தை பொதுமக்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக குறையத் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில், சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது.
வரும் 28-ம் தேதியுடன் அக்னி நட்சத்திரம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் வெயிலின் தாக்கம் குறையாமல் உள்ளது.
தமிழகத்தில் சென்னை, மதுரை, கடலுார், ஈரோடு, கரூர், பாளையங்கோட்டை, தஞ்சை, திருப்பத்துார், திருச்சி, திருத்தணி,வேலுார் ஆகிய 12 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 105.08 டிகிரி வெயில் பதிவானது. இந்த நிலையில் வெயிலின் தாக்கம் குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவிக்கையில்,
அடுத்த 3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்
வங்கக்கடலில் உருவான மோக்கா புயல் வடகிழக்கு திசையில் நகர்ந்து சென்ற போது, காற்றில் ஈரப்பதத்தின் அளவு குறைந்து விட்டது.
மேலும் தற்போது மேற்கு மற்றும் வடமேற்கு திசையிலிருந்து வறண்ட காற்று வீசிக் கொண்டிருப்பதால் கடந்த 2,3 நாட்களாக வெப்பநிலை இயல்பை விடவும் அதிகமாகப் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் தற்போது ஈரப்பதம் குறைந்துள்ள நிலையில் வறண்ட காற்று வீசுவதால் ஹீட் ஸ்ட்ரெஸ் எனும் வெப்ப அழுத்தம் ஏற்பட்டு, அசௌகரியமான சூழல் உருவாகியுள்ளது.
இதன்காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும். பகல் நேர பயணத்தை பொதுமக்கள் குறைத்துக் கொள்ள வேண்டும்’’ என்றார்.