தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு ஒமைக்ரானுக்கு முந்தைய அறிகுறி - அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு ஒமைக்ரானுக்கு முந்தைய அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் இந்தியா உட்பட உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பாதிப்பை தடுக்க உலக நாடுகள் பல விதிகளை விதித்துள்ளன. இதனிடையே தமிழகத்தில் ஒருவருக்கு நேற்று முதல்முறையாக ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் கூடுதலாக 4 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புக்கு முந்தைய அறிகுறிகள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என்றும், நேற்று ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு S ஜீன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
மேலும் அந்த நபர் சென்ற மார்க்கெட், திருமண நிகழ்வு, துக்க நிகழ்வு உள்ளிட்ட பகுதிகளில் 219 நபர்களுக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் கிங்ஸ் மருத்துவமனையில் ஒமைக்ரான் தொற்று பாதிக்கப்பட்டவர் உள்பட 13 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக 15 நாடுகளில் இருந்து வந்த 12,513 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.