சுகாதாரத்துறை செயலாளார் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்து : நடந்தது என்ன ?
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாருக்கும் காயமில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கும்பகோணம் தீ விபத்து, சுனாமி பேரழிவு, டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் ,கொரோனா பெருந்தொற்று போன்ற ஒவ்வொரு நெருக்கடியான காலக்கட்டத்திலும் சிறப்பாக செயல்பட்டு மக்களின் பாராட்டுக்களை பெற்றவர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.
தற்போது அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் ஓமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த, ராதாகிருஷ்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் திருச்சி விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா சோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய சென்றிருந்தார்
அப்போது திருச்சி விமான நிலையத்திற்கு அருகே சென்றபோது, திடீரென கார் அங்கிருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. பின்னர் ராதாகிருஷ்ணன் வேறு ஒரு காரில் திருச்சி விமான நிலையத்திற்கு சென்றார் . இந்த விபத்து காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.