கோவையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்
கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டு புதிய கொரோனா சிகிச்சை கட்டிடத்தை திறந்து வைத்தார்.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன் படி இன்று கோவை வந்த அவர் முன்னதாக இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு சிகிச்சைக்கான நடவடிக்கைகளை கேட்டறிந்தார்.
பின்னர் கூடுதலாக அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை வார்டுகளை திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் மொத்தம் 830 படுக்கையிடன் இயங்குகிறது. இது வரை இங்கு 17 ஆயிரம் சிகிச்சை பெற்று நலம் பெற்றுள்ளனர்.
மேலும் ஆக்ஸிஜன் பயன்பாடு சிக்கனமாக இருக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதனை சிறப்பாக கடைபிடிப்பதில் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை முன்னிலையில் உள்ளது” எனத் தெரிவித்தார்.
மேலும், ”கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இயற்கையாக ஆக்ஸிஜன் அளவை அதிகப்படுத்தும் முறைகளையும் செயல்படுத்தி வருகின்றனர். இது குறித்து மருத்துவமனை டீன் பிற தனியார் மருத்துவமனை மருத்துவர்களை அழைத்து செயல்முறை விளக்க அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டோம்.
மருத்துவமனை சார்பாக கூடுதல் ஆக்ஸிஜன் யூனிட் படுக்கை வசிதிகளை கேட்டுள்ளனர். அதற்கான குறிப்புகளை பெற்று அரசுக்கு அனுப்புகின்றனர். இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா இறப்பு விகிதம் மிக குறைவாக உள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து வரதராஜபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை பார்வையிட்டு, கையிறுப்பு நிலவரம் குறித்து கேட்டறிந்தார். அப்போது மழையில் நீண்ட வரிசையில் தடுப்பூசி செலுத்த மக்கள் நின்று கொண்டிருந்த கண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொதுமக்கள மழையில் நிற்காதவாறு பள்ளி கட்டிடத்தில் நிற்பதற்கான ஏற்பாடுகளை செய்ய கோவை மாநகராட்சி ஆணையர் குமரவேல் பாண்டியனுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து கொடிசியா உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களிலும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.