தமிழகத்தில் பிறந்த குழந்தைகள் அனைவரையும் கண்காணிக்க சுகாதாரத்துறை திட்டம் - எதற்கு தெரியுமா?
நிமோனியாவை முதல் கட்டத்திலேயே கண்டறியும் வகையில் சுகாதாரத்துறை அதிரடி திட்டம் ஒன்றை கையிலெடுத்துள்ளது.
இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 3 கோடி குழந்தைகள் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்படுகிறார்கள். அதில் 30 லட்சம் குழந்தைகள் மரணம் அடைகிறார்கள். தமிழகத்திலும் ஆண்டுக்கு 5-6 ஆயிரம் பிறந்த குழந்தை மரணங்களில் 15% முதல் 20% நிமோனியாவால் நடக்கின்றன.
குறிப்பாக பிறந்து 30 நாட்களுக்குள்ளான குழந்தை மரணங்களுக்கான முதன்மையான காரணமாக நிமோனியா உள்ளது . எனவே நிமோனியா காய்ச்சலை விரைந்து கண்டறியும் பயிற்சியை சுகாதாரத்துறை தொடங்கியுள்ளது.
Social Awareness and Action to Neutralise Pneumonia Successfully என்ற மத்திய அரசு திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை, திருச்சி, சேலம் ஆகிய மையங்களில் இந்த பயிற்சிகள் இந்த மாதம் நடக்கவுள்ளன. குழந்தை நல அரசு மருத்துவர்கள் 500 பேர், 45 மாவட்ட பயிற்சி மருத்துவ அலுவலகர்கள், 45 மாவட்ட மகப்பேறு மற்றும் குழந்தை நல அலுவலர் ஆகியோர் இதில் பங்கேற்கவுள்ளனர்.
தாய்ப்பால் முறையாக கிடைக்காத குழந்தைகள், சரியான நேரத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத குழந்தைகள், வீட்டுக்குள்ளாக உள்ள காற்று மாசு ஆகியவை இதற்கு காரணமாக அமைகிறது.
இது குறித்து மாநில பச்சிளங் குழந்தைகள் நல அதிகாரி மருத்துவர் சீனிவாசன் கூறுகையில், நவம்பர் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை, பச்சிளம் குழந்தைகள் வாரம் கொண்டாடப்படுகிறது. எனவே இந்த வாரத்தில் 0-30 நாட்கள் மட்டுமேயான குழந்தைகள் மருத்துவமனைகளில் இருந்தாலும் வீடுகளிலும் இருந்தாலும் அனைவரையும் நேரில் சந்தித்து, நிமோனியா விழிப்புணர்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.
இதற்காக அங்கன்வாடி பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். எக்ஸ் ரே எடுப்பதற்கு முன்பாகவே முதல் கட்ட அறிகுறிகளை வைத்தே நிமோனியாவை கண்டறிவதற்கான பயிற்சியும் வழங்கப்படும். நோயின் எந்த கட்டத்தில் குழந்தை உள்ளது என்பதை கண்டறிந்து எந்த நிலையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்ற வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.
நிமோனியா என்பது தடுக்கக்கூடியதே. அதற்கான அனைத்து விதமான முயற்சிகளையும் எடுத்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.