உடல் ஆரோக்கியத்திற்கு பல மடங்கு சத்துக்கள் கொடுக்கும் இடியாப்பம்
தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவாக இடியாப்பம் இருந்து வருகிறது. இது ஆவியில் வேகவைத்து எடுக்கக்கூடிய ஒரு ஆரோக்கியமான உணவாக மட்டுமல்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் எளிதில் செரிமானமாக கூடிய ஒரு உணவாகவும் இருக்கிறது.
இந்த இடியாப்பத்தை பெரும்பாலும் நாம் தேங்காய் பால் அல்லது குருமாவுடன் சேர்த்து எடுத்துக் கொள்வோம். இந்த இடியாப்பம் இன்று மட்டுமல்ல சங்க காலத்தில் இருந்து வரக்கூடிய ஒரு உணவாக இருக்கிறது. அதற்கு சில ஆதாரங்களும் உள்ளன. "சூடாமணி நிகண்டில்" இது பற்றிய ஒரு குறிப்பு இருக்கிறது.

அதாவது "இடி" என்றால் நெல்லில் இருந்து தயாராக கூடிய மாவு என்றும் அதில் செய்யப்படும் அப்பம் என்பதால் இதனுடைய பொருள் இடியாப்பம் என்று வந்தது. இதனை தமிழில் "நூல் புட்டு" என்றும் கன்னடத்தில் "நூபுட்" என்றும் மலேசியாவில் புட்டு மாயம் என்றும் அழைக்கப்படுகிறது. இலங்கையிலும் இடியாப்பம் மிகவும் பிரபலமான ஒரு உணவாகவே இருக்கிறது.
சுத்தமான சிறிதுஎண்ணெய் சேர்த்து அதனை வேக வைத்து இடியாப்ப அச்சில் பிழிந்து எடுத்து ஆவியில் வேக வைத்தால் இடியாப்பம் தயாராகிவிடும். இடியாப்பத்தை தேங்காய் பால், மீன் குழம்பு, பாயா இவற்றுடன் நாம் சேர்த்து உண்ணும் பொழுது அதிக சுவை கிடைக்கிறது. கேரளாவில் கொண்டைக்கடலையை கிரேவியாக்கி அதனுடன் இடியாப்பத்தை வைத்து சாப்பிடக்கூடிய பழக்கம் வைத்திருப்பார்கள்.
இது ஒரு சிறந்த காலை உணவாக இருக்கிறது. இந்த இடியாப்பத்தை உதிர்த்து உப்புமாவாகவும் செய்யலாம். இதனை நம் ஊரில் சேவை என்று சொல்வார்கள். இதைக் கொண்டு எலுமிச்சை, தக்காளி, புளி என விதவிதமாக சேவை செய்து நாம் ருசியாக சாப்பிடலாம். சிலர் இடியாப்பத்தில் பிரியாணி செய்பவர்களும் உண்டு.

அதை போல் தினை, வரகரிசி, சோளம், கம்பு, கேழ்வரகு என சிறு தானியங்களிலும் நாம் இடியாப்பம் செய்து சாப்பிடும் பொழுது நமக்கு ஒரு மிகச்சிறந்த சத்து கிடைக்கிறது. இடியாப்பத்தில் சராசரியாக 45 கலோரிகள், 0.27 கிராம் கொழுப்பு, 9. 68 கிராம் கார்போஹைட்ரேட், 0.72 கிராம் புரோட்டின் ஆகியவை இருக்கிறது.
ஆயுர்வேத மருத்துவ முறையில் இடியாப்பம் வாதத்தையும் பித்தத்தையும் சம நிலையில் வைத்திருக்கும் என்று சொல்கிறார்கள். இடியப்பம் எண்ணெய் சேர்க்காத ஆவியில் வேகவைத்து செய்யப்படுவது என்பதால் நம்முடைய வயிற்றுக்கு எந்த பிரச்சனையும் இந்த இடியாப்பத்தால் ஏற்படாது. குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்கக்கூடிய உணவாகவும் உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு ஏற்ற உணவாகவும் இடியாப்பம் இருக்கிறது.