செல்போனில் ஏற்பட்ட வாக்குவாதம் - மாணவனை பிரம்பால் தாக்கிய தலைமையாசிரியர்
திண்டுக்கல் அருகே அரசுப்பள்ளியில் தலைமையாசிரியர் அடித்ததால் மாணவன் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கே.புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் குமார் - பிருந்தா தம்பதியரின் மகனான சசிகுமார் புதுக்கோட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இதனிடையே நேற்று மாலை கணினி வகுப்பின்போது ஆசிரியர் வராததால் விளையாடச் செல்வதற்கு தலைமையாசிரியர் லட்சுமணனிடம் அனுமதி கேட்க அவரது அறைக்கு சசிகுமார் சென்றுள்ளார். அப்போது செல்போனில் பேசிக் கொண்டிருந்த தலைமையாசிரியர் சசிகுமாரிடம் விவரம் கேட்டுள்ளார். அப்பொழுது மாணவர்கள் அனைவரும் விளையாட செல்ல அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்துஅவர் ஏற்கனவே செல்போனில் வாக்குவாதம் செய்த கோபத்தில் இருந்த தலைமையாசிரியர் லட்சுமணன் அதனை மாணவன் மீது காட்டியுள்ளார். பிரம்பால் இரண்டு கைகள் மற்றும் முதுகு என பல இடங்களில் அடித்ததால் மயக்கமடைந்த சசிகுமார் அங்கேயே விழுந்துள்ளார்.
அவரை மீட்ட சக மாணவர்கள் பள்ளி முடிந்ததும் வீட்டில் விட்டுச் சென்ற நிலையில் வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிய தாயார் பிருந்தா மகனின் நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சசிகுமார் சேர்க்கப்பட்டு ரெட்டியார்சத்திரம் காவல் நிலையத்தில் தலைமையாசிரியர் லட்சுமணன் மீது பிருந்தா புகாரளித்தார்.
மேலும் சசிகுமாரின் உறவினர்கள் தலைமை ஆசிரியரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இன்று பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதோடு மட்டுமல்லாமல் தலைமையாசிரியர் லட்சுமணனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.