தலைமை ஆசிரியர் பிரியாவிடை...பிரிய மனமின்றி கண்ணீர் விட்டு கதறி அழும் மாணவர்கள்!
தலைமையாசிரியர் பணியிட மாறுதலில் கண்ணீர் மல்க விடை கொடுத்த மாணவர்கள்.
தலைமை ஆசிரியர்
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே கொண்டம நாயக்கன்பட்டியில் ஒரு அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு 2018- ஆம் ஆண்டு தலைமை ஆசிரியராக மோகன்தாஸ் சேர்ந்தார். அப்போது அந்த பள்ளியில் 52 மாணவர்கள் மட்டுமே இருந்துள்ளனர்.
இதையடுத்து,அக்கம்பக்கத்தில் உள்ள கிராம பகுதிகளில் உள்ள பெற்றோர்களிடம் வீடு வீடாக சென்று அரசு பள்ளியின் சலுகைகள் பற்றி எடுத்துக் கூறி தற்பொழுது 103 மாணவர்கள் ஆக உயர்த்தியுள்ளார். மேலும் ஊர் முக்கிய பிரமுகர்கள் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர்களை அணுகி பள்ளியில் சுற்றுச்சுவர், வகுப்பறை கட்டிடம்,
கழிப்பறை கட்டிடம், மைக் செட், ப்ராஜெக்டர் உதவியுடன் ஸ்மார்ட் கிளாஸ் போன்றவற்றையும் உருவாக்கியுள்ளார். தனியார் பள்ளிக்கு இணையாக பள்ளி ஆண்டு விழாவைநடத்தி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
அழும் மாணவர்கள்
அதுமட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் எட்டாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ மாணவிகளுக்கு பரிசு தொகையும் வழங்கி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 3-ம் தேதி அவருக்கு பணியிட மாற்றம் வந்துள்ளது. அதனால் தலைமை ஆசிரியர் மோகன்தாஸ் பள்ளியிலிருந்து கிளம்பியுள்ளார்.
இதனை அறிந்த பள்ளி மாணவ மாணவிகள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அதை தொடர்ந்து, தலைமை ஆசிரியர் மாணவர்களை தேற்றினார். அதன்பின்னர் மாணவர்கள் கைதட்டி உற்சாகமாக அவருக்கு பிரியாவிடை கொடுத்தனர்.
இந்த காட்சியை அந்த பகுதியில் இருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்திருந்தார். அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.