பின்னோக்கி தொங்கிய தலை.. ஆனால் தன்னமிக்கை உடன் வாழும் மனிதர்.!
வாழ்வில் தன்னமிக்கை ஏற்படுத்தும் மனிதர்கள் பெரும்பாலும் கடினங்களை எதிர்கொண்டவர்களாகவே இருப்பர். அப்படிப்பட்டவர் தான் பிரேசில் மான்டி சான்டோ நகரைச் சேர்ந்த கிளாடியோ வியர்ரா டி ஒலியர்ரா. இவருக்கு, பிறக்கும் போதே கழுத்து பின்னோக்கி வளைந்து, தலை முற்றிலும் திரும்பிய நிலையில் இருந்தது. கால்கள் மோசமாக வளைந்த நிலையில் இருந்தன.
அவரது கைகளும் நெளிந்து பலமற்று இருந்தன. ஆர்த்ரோகிரிபோசிஸ் மல்டிபிளக்ஸ் என்றும் குறைபாடு பிறக்கும் போதே இவருக்கு இருந்துள்ளது. கிளாடியோ 24 மணி நேரம் உயிருடன் இருப்பதே கடினம் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால், கிளாடியோ வியர்ரா டி ஒலியர்ரா தன்னுடைய 44-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். வணிகவியல் துறையில் பல்கலைக்கழக பட்டமும் பெற்றார் கிளாடியோ.
இதுதொடர்பாக கிளாடியோ கூறும் போது, ''சிறுவயதில் இருந்தே என்னை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வேன். மற்றவர்களை சார்ந்திருக்க எப்போதும் விரும்பியதில்லை. டிவி, கம்ப்யூட்டரை ஆன் செய்ய, செல்போனை எடுக்க பயிற்சிகள் மேற்கொண்டேன். நானும் மற்றவர்களை போல சாதாரண மனிதன்தான்.
தங்கள் நாட்டுக்கு வந்து பேசுமாறு எனக்கு ஏராளமான அழைப்புகள் வருகின்றன. அங்கு சென்று பேசி வருகிறேன். மிக விரைவில் உலகம் முழுவதும் பயணித்து சுயமுன்னேற்ற உரையாற்ற இருக்கிறேன்'‘ என்றார்