இது எல்லாம் அமித்ஷா.. மோடியின் திட்டம் : கொந்தளித்த கே.எஸ்.அழகிரி
இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தியை கொண்டு வருவது மோடி மற்றும் அமித்ஷாவின் திட்டம் என்றும் அதற்காகத்தான் புதிய கல்வி கொள்கை என்றும்,தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே. எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ரூபாய் 31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றியுள்ளார்.
பிரதமர் தொடங்கி வைத்த 11 திட்டங்களில் 5 திட்டங்களின் பணிகள் நிறைவடைந்திருக்கிறது. மீதமுள்ள ஆறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தொடங்கி வைத்த திட்டங்களும், அடிக்கல் நாட்டிய திட்டங்களும் ஏற்கனவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பரிசீலனையில் இருந்து தொடக்க வேலைகள் நடைபெற்று வந்தவையாகும்.
பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தின் உரிமைகளுக்கு குரல் கொடுத்து உரையாற்றியது மிகுந்த பாராட்டுக்குரியது என கூறியுள்ள அழகிரி.

பிரதமர் மோடியின் அரசியல் என்பது கூட்டுறவு கூட்டாட்சியை குழிதோண்டி புதைப்பதாகும். மாநில உரிமைகளை பறித்து ஒற்றை ஆட்சியை உருவாக்குவதற்கான முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது.
ஒரே நாடு, ஒரே மொழி என்கிற அடிப்படையில் இந்தி மொழியை திணிப்பதற்காகத் தான் புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டது.
இந்தியாவின் அலுவல் மொழியான ஆங்கிலத்தை அகற்றி விட்டு, இந்தியை மட்டுமே நடைமுறைக்கு கொண்டு வருவது தான் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் கூட்டுத் திட்டமாகும்.
தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநில மக்கள் மொழி உரிமைகளை பாதுகாக்க ஓரணியில் திரண்டு பா.ஜ.க.வின் மொழித் திணிப்பை முறியடிப்பார்கள் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.