ஏன் 20 நாட்களாக வெளியூரில் இருந்தீர்கள்?” : ராஜேந்திர பாலாஜிக்கு செக் வைத்த நீதிபதி - நடந்தது என்ன?

rajendrabalaji judgeordered
By Irumporai Jan 06, 2022 05:42 AM GMT
Report

ஆவின் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி, 3 கோடி வரை மோசடி செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை 20-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அரசு வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 20 நாட்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நேற்று மதியம் கர்நாடக மாநிலம் ஹாசனில் தனிப்படை காவல்துறையால் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட ராஜேந்திரபாலாஜி மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் ராமகிருஷ்ணன், நாகேஷன், அ.தி.மு.க நிர்வாகி பண்டியராஜன் ஆகிய 3 பேரை தனிப்படை போலிஸார் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

அப்போது ஆட்சியர் அலுவலகம் முன்பாக அ.தி.மு.க-வினர் நூற்றுக்கணக்கானோர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து. காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். காவல் நிலையம் அழைத்து வந்த ராஜேந்திர பாலாஜியிடம் விசாரணை அதிகாரி கணேஷ் தாஸ் தனியாக 3 மணி நேரம் விசாரணை நடத்தினார்.

பின்னர் அவரிடம் வாக்கு மூலமும் பெறப்பட்டது. புகார் மனுவில் இடம்பெற்றுள்ள தகவல்களையும் யார் யாரெல்லாம் வேலை வாங்கி தர கோரி தங்களை அணுகினர் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை விசாரித்ததாக தெரிகிறது.

மேலும் கடந்த 20 நாட்களாக எங்கெல்லாம் இருந்தார் யார் யாரெல்லாம் உதவியது என்பது போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை அதிகாரியை தொடர்ந்து மதுரை சரக டிஐஜி காமினி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் ஆகிய இருவரும் விசாரணை நடத்தினர்.

பின்னர் ராஜேந்திரபாலஜிக்கு அடைக்கலம் கொடுத்து உதவி செய்த 3 பேரிடம் தனித்தனியாகவும் கூட்டாகவும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் கர்நாடகவில் ராஜேந்திரபாலாஜியை கைது செய்யும் போது அவர் தப்ப முயன்ற சொகுசு காரை பறிமுதல் செய்த காவல்துறை காரில் முழுமையாக சோதனை செய்தது.

இதனை தொடர்ந்து ராஜேந்திரபாலாஜிக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மற்றும் கொரோனோ பரிசோதனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண் 2 நீதிபதி பரம்வீர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, கைது நடவடிக்கையை கைவிட வேண்டும் எனவும் வெளியூர் செல்லாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதாக ராஜேந்திரபாலாஜி தரப்பு வழக்கறிஞர் வாதம் செய்த நிலையில், அப்படியென்றால் ஏன் 20 நாட்களாக வெளியூரில் இருந்தீர்கள் என நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினார்.

அதனைத் தொடர்ந்து ராஜேந்திரபாலாஜியை வருகிற 20-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில், அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்படுகிறார்.

மேலும் அ.தி.மு.க வழக்கறிஞர் அணி சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.