ஹெச்டிஎப்சி, ஹெச்டிஎப்சி வங்கி இணைப்பால் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கப்போகும் லாபம்..!
ஹெச்டிஎப்சி நிறுவனத்தை ஹெச்டிஎப்சி வங்கியுடன் இணைக்க அதன் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
1991 ஆம் ஆண்டுக்கு பிறகு ரிசர்வ் வங்கி தனியார் வங்கிகளுக்கு அனுமதி வழங்கியப்போது ஹெச்டிஎப்சி வங்கி தான் முதலில் பயன்பாட்டுக்கு வந்தது . 1994 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுவரும் இந்த வங்கியுடன் ஹெச்டிஎப்சியின் துணை நிறுவனங்களான ஹெச்டிஎப்சி ஹோல்டிங்ஸ் மற்றும் ஹெச்டிஎப்சி இன்வெஸ்ட்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஹெச்டிஎப்சி உடன் இணைய இருக்கிறது.
அதன்பின் அடுத்தகட்டமாக ஹெச்டிஎப்சி நிறுவனம் ஹெச்டிஎப்சி வங்கியுடன் இணைய இருக்கிறது. ஒருங்கிணைந்த ஹெச்டிஎப்சி வங்கியில் 41 சதவீத பங்குகள் ஹெச்டிஎப்சி வசம் இருக்கும். 25 ஹெச்டிஎப்சி பங்குகள் இருந்தால் 42 ஹெச்டிஎப்சி வங்கியின் பங்குகள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் சில்லறை பங்குதாரர்களுக்கும் ஹெச்டிஎப்சி மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி இணைப்பிற்குப் பின்பு பங்குகள் பரிமாற்றம் செய்யப்படும்.
குறிப்பாக ஹெச்டிஎப்சி தனியாக இயங்கும் காரணத்தால் ஹெச்டிஎப்சி வங்கியில் வீட்டு கடன் சேவை இல்லாமல் அதிகப்படியான வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது. தற்போது இரு நிறுவனங்களின் இணைக்கும் பட்சத்தில் வாடிக்கையாளர்களை இருவரும் பெற முடியும் என்பதால் இதன் பின்பு மிகப்பெரிய அளவிலான வர்த்தகத்தை ஹெச்டிஎப்சி நிர்வாகம் பெற முடியும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் கிரெடிட் கார்டு வர்த்தகத்தில் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெற பணியாற்றி வரும் நிலையில் ஹெச்டிஎப்சி உடனான இணைப்பு புதிய சக்தியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹெச்டிஎப்சி இணைப்பு அறிவிப்பு வெளியான நிலையில் ஹெச்டிஎப்சி பங்குகள் 15 சதவீதமும், ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் 13.56 சதவீதமும் உயர்ந்துள்ள நிலையில் நேற்றைய வர்த்தக உயர்வின் மூலம் இரு நிறுவனப் பங்குகளும் 52 வார உயர்வை எட்டியது.
ஹெச்டிஎப்சி வங்கி 6.8 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டு உள்ளதால் இந்நிறுவனங்களின் மதிப்பு உயர்வது மட்டும் அல்லாமல் முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பும் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.