கோர்ட்டை விட நீங்க பெரிய ஆளா விஷால்? கோபமடைந்த நீதிபதி

Vishal Lyca Tamil nadu Madras High Court
By Karthick Sep 22, 2023 12:14 PM GMT
Report

லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உத்தரவிட்டும் ஆவணங்களை சமர்ப்பிக்காத நடிகர் விஷாலை சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது.

லைகா நிறுவனத்தின் வழக்கு   

தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்துக்காக நடிகர் விஷால் கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியனிடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது.

hc-warns-vishal-in-lyca-case

அந்தத் தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை மீறி, ‘வீரமே வாகை சூடும்’ என்ற படத்தை வெளியானதை அடுத்து விஷால் நிறுவனத்துக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதனை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, தலைமைப் பதிவாளர் பெயரில் ரூ.15 கோடியை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மூன்று வாரங்களில் நிரந்தர வைப்பீடாக டெபாசிட் செய்ய உத்தரவிட்டார். இதனை எதிர்த்து விஷால் தரப்பு மேல்முறையீடு செய்ய, இரு நீதிபதிகள் அமர்வு தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்தனர். மேலும் தனி நீதிபதி முன் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை திரையரங்குகள் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக் கூடாது என தடை விதித்து உத்தரவிட்டிருந்தனர்.

கண்டித்த நீதிபதி 

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது நடிகர் விஷால் நேரில் ஆஜராகி விளக்கமளித்திருந்தார். அப்போது கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் வரையிலான விஷாலின் வங்கிக் கணக்குகளின் பரிவர்த்தனை விவரங்களையும், சொத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி பி.டி.ஆஷா இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நேரில் ஆஜரான விஷாலிடம் நீதிபதி, நீதிமன்ற உத்தரவின்படி ஆவணங்களை தாக்கல் செய்யாததால், விஷால் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என கேள்வி எழுப்பினார்.

hc-warns-vishal-in-lyca-case

மேலும், விஷால் தன்னை நீதிமன்றத்தைவிட பெரிய ஆளாக எண்ண வேண்டாம் என கட்டமாக கண்டனம் தெரிவித்த நீதிபதி, நீதிமன்றத்தைப் பொறுத்தவரை அனைவரும் சமமாகவே கருதப்படுவார்கள் என கூறினார். அப்போது விஷால் தரப்பில், "வங்கியிலிருந்து ஆவணங்களை பெற தாமதம் ஆகிவிட்டது. இதனால் நீதிமன்றம் கேட்ட ஆவணங்கள் நேற்று ஆன்லைன் வாயிலாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது.

 அடுத்த முறை நேரில் ஆஜராகமுடியாது 

அப்போது நீதிபதி, ஆன்லைனில் ஆவணங்கள் தாக்கல் செய்தது உறுதியாகாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என நீதிபதி எச்சரித்தார். விஷால் தரப்பில், 3 கார்கள், ஒரு பைக் இருப்பதாகவும், இரண்டு வங்கி கணக்குகளின் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. விஷாலுக்கு சொந்தமான வீட்டின் கடன் தொடர்பான விவரங்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

hc-warns-vishal-in-lyca-case

75 வயதான தந்தையின் கிரானைட் தொழில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தின் காரணமான அவரது வீட்டுக் கடனையயும் விஷால் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.இந்த ஆவணங்களை பதிவேற்றம் செய்யப்பட்டதற்கான விவரங்களை தாக்கல் செய்ய 6 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என கேட்கப்பட்டது.

மேலும், அடுத்த 28 நாட்களுக்கு படப்பிடிப்புகளில் கலந்துகொள்ள இருப்பதால், அடுத்த விசாரணையின்போது நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என விஷால் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வங்கிகளிலிருந்து கூடுதல் ஆவணங்களை பெறவும், நீதிமன்றம் கேட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்த விவரங்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி உத்தரவிட்டு விசாரணையை செப்.25-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.