கடைகளில் தமிழில் பெயர்ப்பலகை கட்டாயம் - உயர்நீதிமன்றம் உத்தரவு

Tamil nadu Madras High Court Tamil
By Karthikraja Sep 05, 2026 01:50 PM GMT
Report

high court orders tamil nameboards mandate for shops by november 1: தமிழ்நாட்டில் நவம்பர் 1 ஆம் தேதிக்குள் கடைகளில் தமிழில் பெயர்ப்பலகை கட்டாயம் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடைகளில் தமிழில் பெயர்ப்பலகை கட்டாயம்

சென்னை மாநகராட்சி உட்பட தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகளுக்கு தமிழில் பெயர் பலகைகள் வைக்க வேண்டும் என்று 2025ம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. 

கடைகளில் தமிழில் பெயர்ப்பலகை கட்டாயம் - உயர்நீதிமன்றம் உத்தரவு | Hc Orders Tamil Nameboards For Shops By November 1

பெயர் பலகைகளில், தமிழ் பெயருக்கு கீழ் ஆங்கிலத்தில் பெயர் வைத்துக் கொள்ளலாம். உத்தரவை அமல்படுத்த தவறினால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து மும்பையில் உள்ள இந்திய சில்லறை வர்த்தகர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதில், உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட வணிகச் சின்னங்களின் அடிப்படையில் பெயர் பலகைகள் அமைக்கப்பட வேண்டும், அவற்றை மாற்றும்போது அது வாடிக்கையாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டது.

மேலும், நிதி உள்ளிட்ட காரணங்களால் உடனடியாக இதனை மாற்ற இயலாது என்பதால் பெயர்ப்பலகைகளை மாற்ற கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் நவம்பர் 1 ஆம் தேதிக்குள் அனைத்து கடைகளின் பெயர்களும் தமிழில் இருக்க வேண்டும். அரசின் உத்தரவை பின்பற்றாத கடைகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.