3 ஆம் பாலினத்தவர்களுக்கு மூன்று மாதங்களில் தடுப்பூசி: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Covid vaccines Chennai highcourt Transgenders
By Petchi Avudaiappan Aug 02, 2021 11:08 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

 மூன்றாம் பாலினத்தவர் அனைவருக்கும் மூன்று மாதங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்யும்படி தமிழ்நாடு அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தையும், கொரொனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தையும், ரேஷன் அட்டைகளோ, அடையாள அட்டைகளோ இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி மூன்றாம் பாலினத்தவரான கிரேஸ் பானு என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கும் நிவாரணம் வழங்கவும், தடுப்பூசி முகாம் நடத்தவும் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டிருந்தது. அந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, மூன்றாம் பாலினத்தவருக்கு கொரோனா நிவாரண நிதியில் முதல் தவணை 2000 ரூபாயை வழங்கிவிட்டதாகவும், இரண்டாம் தவணையும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அதனை ஏற்ற நீதிபதிகள், மூன்றாம் பாலினத்தவருக்கு இரண்டாம் தவணை வழங்கப்படும் என அரசு உறுதி அளித்துள்ளதாக குறிப்பிட்டு, அவர்களுக்கு மூன்று மாதங்களில் தடுப்பூசி செலுத்துவதை உறுதிசெய்ய அரசிற்கு உத்தரவிட்டு, கிரேஸ்பானு தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தனர்.