தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர்வா? நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டில் பேருந்து கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பேருந்து கட்டணம்
டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை உயர்த்தக் கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுவில், கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பேருந்துகளுக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டபோது டீசல் லிட்டருக்கு ரூ.63 க்கு விற்கப்பட்டது. தற்போது லிட்டருக்கு ரூ. 92 ஆக உயர்ந்துள்ளது.
உயர்மட்டக் குழு
இதே போல் கேரளாவில் 1 கிமீ தூரத்துக்கு ஒரு ரூபாய் 10 காசுகளும், கர்நாடகாவில் ஒரு ரூபாயும், ஆந்திராவில் ஒரு ரூபாய் 8 காசுகளும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் 1 கிலோ மீட்டருக்கு 58 காசுகள் மட்டும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த மனு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பாக விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "பேருந்து கட்டணம் நிர்ணயிக்க போக்குவரத்து துறைச் செயலாளர் தலைமையில், உயர்மட்டக் குழு அமைத்து 2024 டிசம்பர் 6 ஆம் தேதி அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
4 மாதம்
உயர்மட்டக்குழு அரசு போக்குவரத்துக் கழகங்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை கேட்டு பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக அரசுக்கு அறிக்கை அளிக்கும்" என தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தமிழ்நாட்டில் பேருந்து கட்டண உயர்வு குறித்து அரசு போக்குவரத்துக் கழகங்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள், மக்களுடன் 4 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
பொங்கல் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகள், விமான கட்டணத்திற்கு இணையாக பேருந்து கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர்.