விசாரணை மோசமாக நடந்துள்ளது - பொன்முடி வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி அதிரடி
அமைச்சர் பொன்முடி தொடர்பான சொத்து குவிப்பு வழக்கில், விசாரணை மிகவும் மோசமாக நடந்துள்ளதாக உயர்நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார்.
அமைச்சர் பொன்முடி வழக்கு
முந்தைய திமுக ஆட்சியின் போது, வருமானத்திற்கு அதிகமாக அமைச்சர் பொன்முடி சொத்து குவித்ததாக புகார்கள் எழுந்த நிலையில், அந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பின்னர், வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
மோசமான விசாரணை
இந்நிலையில், இந்த வழக்கை இன்று சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்தது. அப்போது, தாமாக முன்வந்து சீராய்வு மேற்கொண்டதற்கான காரணத்தை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்வைத்தார். இந்த வழக்கில் விசாரணை மிகவும் மோசமாக நடந்துள்ளதாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
தான் பார்த்ததில் மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்று என குறிப்பிட்ட அவர், 17 பக்க உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில், லஞ்சஒழிப்பு துறை மற்றும் அமைச்சர் பொன்முடி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்புமாறும் அதற்கு அவர்கள் பதிலளிக்கும் படியும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த வழக்கின் விசாரணையை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு நடத்துமாறு நீதிமன்ற பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.