செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு - தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
செந்தில் பாலாஜி
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டு , புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்னர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
சிகிச்சைக்கு பின்னர் செந்தில் பாலாஜியை, அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து மருத்துவக் காரணங்களுக்காக ஜாமின் வழங்கக் கோரி அவரது தரப்பில் 2 முறை சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தொடர்ந்து மறுக்கப்பட்டு வரும் நிலையில், நீதிமன்ற காவலும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இதனால் அவர் புழல் சிறையிலேயே இருந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் செந்தில் பாலாஜிக்கு காலை 6 மணியளவில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் புழல் சிறைக்கு திரும்பினார்.
ஒத்திவைப்பு
இதனையடுத்து உடல்நிலையை காரணம் காட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி சார்பில் மீண்டும் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது செந்தில் பாலாஜியின் வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டு, ஜாமீன் மனு மீதான விசாரணை 16ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிட்டார். மேலும் செந்தில் பாலாஜியின் உடல் நிலை குறித்த ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் அறிக்கை, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் வாதிட்டார்.
அப்போது உடல் நிலை சரியில்லாமல் இருந்தால் சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் 45வது பிரிவு பொருந்தாது என தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.