ஹர்திக் பாண்டியா இல்லை - மும்பை இந்தியன்ஸ் அணி இந்த நான்கு வீரர்களை தான் தக்க வைக்கும்: இர்பான் பதான் உறுதி

அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் தக்க வைக்கப்பட வாய்ப்புள்ள நான்கு வீரர்கள் யார் யார் என்பது குறித்தான தனது கருத்தை முன்னாள் இந்திய வீரரான இர்பான் பதான் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார். ஐபிஎல் 2022 மெகா ஏலம் நடக்க இருப்பதால் ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்களை மட்டும் தக்கவைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதித்துள்ளது.

மூன்று இந்திய வீரர்கள் ஒரு வெளிநாட்டு வீரராக இருக்கலாம் அல்லது இரண்டு இந்திய வீரர்கள் இரண்டு வெளிநாட்டு வீரர்கள் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர மற்ற அனைத்து வீரர்களும் ஏலத்திற்கு விடப்பட வேண்டும்.

மேலும் புதிதாக இணைந்துள்ள 2 அணிகள் ஏலத்திற்கு வெளியே 3 வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் அதில் 2 இந்திய வீரர்கள் ஒரு வெளிநாட்டு வீரர் என மூன்று வீரர்களை தக்க வைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதித்துள்ளது. தக்க வைக்கப்படும் வீரர்கள் பட்டியலை 30ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் கெடு விதித்துள்ளதால், ஒவ்வொரு அணியும் தங்களக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்து கொள்வதில் முழு மூச்சாக செயல்பட்டு வருகின்றன.

அதே போல் முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் ஒவ்வொரு அணிக்கும் தேவையான தங்களது ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். அந்தவகையில், முன்னாள் இந்திய வீரரான இர்பான் பதான், அடுத்த ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணி தக்க வைத்து கொள்ள வேண்டிய நான்கு வீரர்கள் யார் யார் என்பது குறித்தான தனது கருத்தை ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து இர்பான் பதான் பேசுகையில், “ரோஹித் சர்மாவிற்கு அடுத்தபடியாக மும்பை இந்தியன்ஸ் அணி இஷான் கிஷனிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் என நினைக்கிறேன்.

ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக இஷான் கிஷனை தக்க வைத்து கொள்வதே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பயனுள்ளதாக இருக்கும். இஷான் கிஷனை தக்க வைத்து கொண்டால் அடுத்த 10 வருடங்களுக்கு அவரால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கூடுதல் பலம் கிடைக்கும்.

பந்துவீச்சாளர்கள் வரிசையில் பும்ராஹ்வை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் விட்டே கொடுக்காது என்பதில் சந்தேகம் இல்லை. அதே போல் வெளிநாட்டு வீரர்களாக நிச்சயம் பொலார்டிற்கே மும்பை இந்தியன்ஸ் அணி முன்னுரிமை கொடுக்கும்” என தெரிவித்துள்ளார்.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்