பாகிஸ்தான் அணி தோல்வி: பிரபல வீரரின் மனைவிக்கு மிரட்டல்
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசியது. அதன்படி முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்து அசத்தியது.
தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 96 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் இழந்து தடுமாறிக்கொண்டிருந்தது . அந்த அணியை ஸ்டாய்னிஸ் மற்றும் மேத்யூ வேட் ஆகியோர் சிறப்பாக ஆடி வெற்றி பெற வைத்தனர். இந்த ஆட்டத்தில் போட்டியின் முடிவை ஒரே பந்து மாற்றியது என்று கூறலாம். கடைசி 12 பந்துகளில் வெற்றிக்கு 22 ரன்கள் தேவை என்ற நிலையில் 19வது ஓவரின் 3வது பந்தை வீசிய சாகின் அப்ரிடி சிறப்பாக பந்து வீச அதனை எதிர்த்து விளையாடிய மேத்யூ வேட் கேட்ச் ஒன்றினை கொடுத்தார். ஆனால் அதனை ஹசன் அலி பிடிக்க தவறிவிட்டார். அந்த பந்தில் 2 ரன்கள் கிடைக்க அடுத்த மூன்று பந்துகளையும் வேட் சிக்சருக்கு விரட்டி ஆஸ்திரேலிய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
ஹசன் அலி அந்த கேட்சை மட்டும் பிடித்து இருந்தால் நிச்சயம் போட்டி பாகிஸ்தானுக்கு சாதகமாக அமைந்து இருக்கும். இதனால் கடுப்பான பாகிஸ்தான் ரசிகர்கள் அவரை சரமாரியாக சமூக வலைத்தளங்களில் விமர்சித்தனர்.
இந்நிலையில் ஹசன் அலியின் மனைவி ஷமியா அர்ஸு இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர் அமீரகத்தில் வேலை பார்த்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர்.
ஷமியா அர்ஸு இசுலாமியத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இதனால் அவரது டுவிட்டர் கணக்கில் சென்று பாகிஸ்தான் ரசிகர்கள் அவரையும், குழந்தைகளையும் திட்டி வருவதாகவும், இதனை தடுத்து நிறுத்தும்படி ஷமியா அர்ஸு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் விடுத்தபடி ஷமியா அர்ஸு பெயரில் டுவிட்டர் பதிவுகள் வெளிவந்தது.
இந்த நிலையில் ஹசன் அலியின் மனைவி ஷமியா அர்ஸு இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் போஸ்ட் வெளியிட்ட அவர், '' பாகிஸ்தான் ரசிகர்களிடம் இருந்து எனக்கோ, எனது கணவருக்கோ, மகளுக்கோ அச்சுறுத்தல்கள் வரவில்லை. சமுக வலைதளங்கள் வழியாக அச்சுறுத்தல் வந்ததாக கூறப்படுவது முற்றிலும் தவறானது. நான் டுவிட்டரில் இல்லை. எனது பெயரில் வரும் டுவிட்டர் அக்கவுண்ட் போலியானது'' என்று கூறியுள்ளார்.